மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நடாகும். இது இந்தியாவின் இலட்சதீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 298 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். இதன் தலை நகரமான மாலே 2 கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டது. மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் ‘மாலத்வீப'(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது ‘மகால்’ என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். மாலைத்தீவு 26 தீவு திட்டங்களும் 19 நிர்வாகப்பிரிவாக ஒன்றினைக்கப்பட்டடுள்ளதுடன் அதன் தலைநகராக மாலேவே காணப்படுகின்றது.

மலைத்தீவு மக்கள் முஸ்லிம்களாக காணப்படும் அதே வேளை உத்தியோகப்பூர்வ மதமாக இஸ்லாம் காணப்படுகின்றது. உலகில் மாலைத்தீவு பெண்களே அதிக சுதந்திரமுடையவர்கள் என்ற கருத்தும் காணப்படுகின்றது. இந்நாட்டின் தேசிய மொழியாக ‘திவெகி’ காணப்படுகின்றது. சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களவர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு யூலை 26 ஆம் திகதி மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத்தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார். மலைத்தீவானது சுதந்திரமடைந்தன் பின்பு 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்தவராக இணைந்து கொண்டது. அதே நேரம் 1976 ஆம் ஆண்டு கொழும்பில் நடைப்பெற்ற 5வது உச்சி மாநாட்டில் அணிசேரா நாடுகளின் இயக்கத்தில் இணைந்து கொண்டது.

வரலாறு

கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி கலாசார வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன.

மாலைத்தீவுகளின் தொல்பொருள் ஆய்வு பற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள் ஆனையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த பௌத்த சிதைவுகளை ஆராயும் நோக்கில் அங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. கிபி 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.

1980களின் நடுப்பகுதியில் மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு முதல் அனுமதி பெற்றவரான எயெரதாள் என்ற ஆய்வாளர் ‘ஏவிட்டா'(திவெயி) என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான கலாச்சரமொன்றைக் கண்டுபிடித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் ஏனைய தொல்பொருட்களும் இப்போது மாலே தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

எயெரதாள் அவர்களின் ஆய்வுகளின்படி கிமு 2000 காலப்பகுதியிலேயெ மாலைத்தீவு கடல் வழி வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அவரின் கருத்துப்படி சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் மக்கா நோக்கி பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாகும். கட்டிடப் பொருள் தட்டுப்பாடு காரணமாகப் புதிய கலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்திம் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள் மீது எழுப்பட்டன என கருதுகின்றார்.

மாலைத்தீவின் வாரலாற்றின் படி சிங்கள இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்புநிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைதீவில் தங்கும் படியாயிற்று அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைதீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தான் என கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலைதீவை ஆண்டார்கள் இவர்கள் தங்களை தமிழரின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர்.

இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலைத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலைத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது எனினும் 1887 முதல் 1965 யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாக காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.

1988 இல் இலங்கை தமிழ் ஆயுதக் குழு ஒன்று மாலைத்தீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவைச் சில மணித்தியாளங்களுக்குள் கைப்பற்றியது

2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அலைகளால் தீவு பெரிதும் பாதிக்கப் பட்டது. 1-4.5 மீட்டர் உயரமான அலைகள்தாக்கியது.

அரசியல்

மாலைத்தீவு ஒரு ஜனநாயமுறையிலான குடியரசு அரசாங்கத்தை கொண்டுள்ளது. குடியரசு அரசியலமைப்பு 1968 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது, மற்றும் 1970 1972 மற்றும் 1975 ல் திருத்தப்பட்டது. மாலைத்தீவுகளின் அரசியல் அதிபர் முறை குடியரசு என்ற சட்ட வரம்புக்குள் நடைபெறுகின்றது. அதிபர் அரசின் தலைவராகப் பணியாற்றும் அதேவேளை அவருக்க உதவியாக அமைச்சர் சபையையும் காணப்படுகின்றது. அதனை அவரே நியமிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது.  தேர்தல் வரும் போது மக்கள் மஜ்லிஸ் என்பது ஒருவரை நியமிக்கன்றது. பாராளுமன்றத்தில் நடைபெறும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனினும் இதனை மக்கள் கருத்துக்கணிப்பு மூலம் உறுதிப்படுத்த வேண்டும். அல்லது மக்கள் அவரை நிராகரிக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்ததின் படி அவர் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

ஜனாதிபதி தமது மந்திரி சபையை நியமிக்கின்றார். அமைச்சராக நியமிக்கப்படுபவர் மக்கள் மஜ்லிஸ் சபை அங்கத்தவராக இருக்கவேண்டும் என்பதில்லை. அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட பின்பும் கூட மஜ்லிஸ் சபை அங்கத்தவராக வர முடியும். அமைச்சரவை ஜனாதிபதிக்கு பொறுப்பாகவும் அவருக்கு வேண்டிய ஒத்தாசைகளை செய்கின்றது. ஆனால் எப்பொழுதுமே அமைச்சரவை ஆலோசனைகளை ஜனாதிபதி ஏற்கவேண்டுமென்பதில்லை. ஜனாதிபதி அரசியல் யாப்புக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

மாலைத்தீவுகளின் பாரளுமன்றம் மக்கள் மஜ்லிஸ் என அழைக்கப்படுகின்றது. இது 1957 இல் உருவாக்கப்பட்டது. இதில் 1968 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி 54 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி முறைப் பாரளுமன்றமாகும். இவர்களில் 46 அங்கத்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். மிகுதி 8 மஜ்லிஸ்கள் அதாவது பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்கள். மலைத்தீவு தலைநகரமான மாலேக்கு எட்டு அங்கத்தவர்கள் உள்ளனர். ஒரு பவழத்தீவுக்கு இரண்டு ஆண்கள் வீதம் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 77 பேர் தெரிவு செய்யப்பட்டனர். மாலைத்தீவுகள் மக்கள் கட்சி இதுவரையும் பாராளுமன்றத்தை வைத்திருந்த போதிலும் 2005 க்குப் பிறகு பிற கட்சிகளும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன. சட்டம் இயற்றும்பணியில் மஜ்லிஸ் சபை பங்குப்பற்றுகின்றது. ஜனாதிபதியும் சட்டம் இயற்றம் பணியை பெற்றுள்ளார். மஜ்லிஸ் சபை நம்பிக்கையில்லா தீர்மானம் இயற்றி யாராவது மந்திர்pயை நீக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. வேறு பெரிய அதிகாரங்கள் அதற்கில்லை.

ஜனாதிபதி முன்மொழியும் சட்டங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு திருத்தங்கள் சம்பந்தமாக பிரத்தியேகமாக நியமிக்கப்படும் மக்கள் மஜ்லிஸ் செயல்படுகின்றது. பிரதேசவாரியாக அங்கத்தவர்களை மஜ்லிஸ்சும் ஜனாதிபதியும் நியமிக்கிறார்கள். அரசியல் யாப்பு திருத்த பிரேரனைகளை கையாளும் இந்த ஸ்பெசல் மஜ்லிஸ் மாலைத்தீவு அரசியல் யாப்பில் ஒரு சிறப்பம்சம். அன்றாட நிர்வாக்கடமைகளை கவனிக்க ஒரு பணிக்குழுவோ சிவில் நிர்வாக அலுவலர்களோ இருந்தாலும் அது மற்ற நாடுகளை போன்று வலுவுள்ளதாக இல்லை. ஏனெனில் சிவில் நிர்வாக்கட்டமைப்பு ஒன்ற இருந்தாலும் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளுக்கு மஜ்லிஸ்சே நியமிக்கப்படுகின்றார்கள். அதனால் அரசியல் தலையீடு நிர்வாகத்தின் பல நிலைகளிலும் உணரப்படுகின்றது. வி.எச். கொலின் தமது ஆராய்ச்சியில் இத்தகையதொரு நிர்வாக்கட்டமைப்பை வேறு எந்த தென்னாசிய நாடுகளிலும் காணமுடியாது என்கிறார்.

நீதித்தறை தலைவராக இருப்பவர் பிரதம நீதியரசர். அவரும் அவரது நீதிபரிபாலன குழுவும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் இஸ்லாம் மத கோட்பாடுகளையும் இஸ்லாமிய ஷரிஆவினையும் கருத்தில் கொள்ள வேண்டும்;. நீதித்துறையின் எல்லா நிலைகளிலும் மஜ்லஸ், காசிகள் என்போர் பங்கு பற்றுகின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகள் அரசியல் யாப்பு சட்டமாகவும் அன்றாட நீதிபர்பாலன ஒழுங்கு முறையாகவும் உள்ளது. நாட்டில் 194 நீதவான் நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. மாலத்தீவில் சிவில் துறையும் நீதித்துறையும் மேலிருந்து கீழாக கூர் கோபுர அமைப்பில் காணப்படுகின்றது. அரசின் சகல துறைகளிலும் இஸ்லாமி சரியத் சட்டம் மேலோங்கி நிற்கிறது.

நிருவாக அலகுகள்

மாலைதீவுகளின் 26 பவழத்தீவுகளும் இருபது நிர்வாக பவழத்தீவுகளாகவும் ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது மாலைத்தீவுகளில் பெரியதும் உலகிலே மிகப்பெரியதுமான பவழத்தீவு, ஞாவியானி பவழத்தீவு என்பதாகும்.

ஒவ்வொரு பவழத்தீவுக்கும் ஒரு தலைவர் அதிபரால் நேரடியாக நியமிக்க்ப்படுவதோடு அவற்றில் காணப்படும் தீவுகளுக்கு ஒவ்வொரு தலைவர் வீதமும் அதிபரால் நியமிக்கப்படுவர். இவர்கள் கூட்டாக பவழத்தீவுகளின் நிர்வாகத்துக்கு அதிபருக்கு பதில் கூறவேண்டியவர்களாவர்.

பொருளாதாரம்

மாலைத்தீவுகளின் தலா வருமானம் 1980களில் அதிகூடிய வளர்ச்சியான 26.5 சதவீதத்தைக் காட்டியது, இது 1990களில் 11.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இப்போதும் அது பேணப்படுகிறது.

சுற்றுலாத் துறையும் மீன்பிடிக் கைத்தொழிலும் மாலைத்தீவுகளின் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. கப்பல் மற்றும் வங்கி, உற்பத்தி துறைகளும் முக்கிய பங்களிப்பை செய்கின்றன. தெற்காசியாவில் இரண்டாவது கூடிய தலா வருமானத்தை கொண்டது. மாலைத்தீவுகளின் முக்கிய வாணிப நாடுகள் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா என்பனவாகும். அதே நேரம் மாலத்தீவின் பணம் ருபியா என்றழைக்கப்படுகிறது.

மீன்பிடி :- மாலைத்தீவுகளின் பொருளாதாரம் மீன்பிடி மற்றும் கடல் சார் துறைகளில் முக்கியமாக தங்கியுள்ளது. மீன்பிடித்தல் மக்களின் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்கிறது.

1974 ஆம் ஆண்டில் பாராம்பரிய ‘டோனி’ என்ற தோணிகள் இயந்திர படகுகளுக்கு மாறியமை மீன்பிடி கைத்தொழிலினதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினதும் முக்கிய மைல்கல்லாகும். 1977 இல் மீன்களை தகரப் பேணியில் அடைக்கும் தொழிற்சாலையொன்று யப்பானிய உதவியோடு பெளிவரு தீவில் நிறுவப்பட்டமை இன்னுமொரு முக்கிய நிகழ்வாகும். மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக 1980 களில் மீன்பிடி தொடர்பான கல்வி பாடசாலை கல்வியில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டது. இன்று மீன்பிடிக் கைத்தொழில், மாலைத்தீவுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்கிறது. மேலும் நாட்டின் தொழிலாளர் படையில் 30% பேர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு வருவாயில் சுற்றுலாத்துறைக்கு அடுத்தபடியாக அதிக வருவாயை கொடுக்கிறது.

சுற்றுலாத் துறை :- சுற்றுலாத் துறையின் வளர்ச்சி நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு வித்திட்டது. அது மறைமுகமாக பல வேலைவாய்ப்புகளை வழங்கியது. இன்று மொத்த தேசிய உற்பத்தியின் 20மூ வழங்கும் சுற்றூலாத்துறை, நாட்டுக்கு கூடிய வெளிநாட்டு வருவாயை பெற்றுக் கொடுக்கும் துறையாக விளங்குகிறது. 86 சுற்றுலாதலங்களுக்கு 2000 ஆம் ஆண்டு சுமார் 467,154 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அண்மைக்காலத்தில் உல்லாச பயணிகளின்  வருகை அதிகரித்து காணப்படுகின்றது.

குடிசைக் கைத்தொழில் :- சுற்றுலாத்துறையின் வளர்ச்சி நாட்டின் பாரம்பரிய குடிசைக் கைத்தொழில்களின் வளர்ச்சியை மறைமுகமாக அதிகரித்தது. பாய் இழைத்தல், நெசவு, சிற்பம், கயிறு திரித்தல் போன்ற கைத்தொழில்கள் முக்கிய வளர்ச்சியைக் கண்டன.

ஏனைய துறைகள் :- தக்க மண்வளமும் நீரும் இல்லாததால் விவசாயம் வேரூண்ட வில்லை. இப்பொழுது பெருமளவ நிலப்பரப்பில் தெங்கு நடுகையில் ஈடுபட்டுளளனர். கால்நடை வளர்ப்பும் இல்லை. மாலைத்தீவில் விவசாயத்திற்கோ அல்லது கைத்தொழில் வளச்சிக்கோ வேண்டிய உள்ளீடுகள் இல்லை. இப்பொழுது அரசாங்கம் தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் ஏற்றுமதி என்பவற்றில் கவனம் செலுத்துகிறது. நான்கு மாதம் மழையும் ஏனைய மாதங்கள் வரண்ட நிலையம் சீரில்லாமல் காணப்படுகின்றது. அதனால் பெரிய காடுகள் உருவாகவில்லை.

25மூ வீத தேசிய உற்பத்தி கடற்தொழிலிருந்து பெறப்படுகிறது. தேங்காய், கொப்பரா போன்ற தெங்கு உற்பத்திகள் எற்றுமதியாகின்றன. உல்லாச பயணத்துறை மூலம் 20மூ  பொரளாதார அபிவித்தி கண்டுள்ளனர். உல்லாச பிரயாணிகள் பெரும்பாலும் தென்னாசியா, தென்கிழக்காசியா, யப்பான் போன்ற நாடுகளிலிருந்து வருகிறார்கள். அண்மைக்காலங்களில் பன்முகப்படுத்தப்பட்ட பொரளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.  1957 அம் ஆண்டு குடியரசின் இரண்டாவது ஜனாதிபதியான இப்ராகிக் நஸீர் ஸ்திரமாக ஆட்சி செய்தார். இவரே பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதில் முழுமூச்சாக நின்றார். இவரே மாலைத்தீவின் உல்லாச பிரயாணக்கைத்தொழிலுக்கு அடிப்படை வகுத்தவர். கயிறு உற்பத்தி, கப்பல் கட்டுமானம், தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி என்பவற்றில் அரசு கவனம் செழுத்துகின்றது. பொருளாதாரத்தை நவீனப்படுத்த முனைகிறது.  இலங்கை, இந்தியா, அரபு சாடுகளுடன் நல்லுறவ வைத்திருக்கிறது நவீன மாலைத்தீவு.

சமூக அமைப்பு

மாலைத்தீவு மக்கள் பல கலாச்சாரங்களின் கலப்பினால் உருவானவர்காளாவர். இந்தியர்கள், இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள், பாரசீகத்தவர்கள், அராபியர் போன்ற பல இனத்தவர்கள் வாழ்ந்துள்ளனர். முதலாவது குடியேற்றவாசிகள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவார். 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையிலிருந்து வந்த இந்தோ-ஆரிய மக்கள் அடுத்ததாக இங்கு வந்தவர்களாவார். கிபி 12வது நூற்றாண்டில் மலாய தீவுகள், கிழக்காப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த மக்கள் இங்கு குடியேறினர். இன்றைய மாலைத்தீவினர் இம்மக்கள் அனைவரதும் கலப்பில் உருவான பல்கலாச்சாரக் கலப்பு மக்களாவர்.

மாலைத்தீவுகளின் ஆட்சி மொழி திவெயி மொழியாகும், இது ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். இம்மொழி சிங்களத்துடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். ஆங்கிலம் வாணிபத்துறையில் பரவலாகப் பாவனையில் உள்ளதுடன் இப்போது பாடசாலைகளிலும் போதனா மொழியாக வளர்ச்சி கண்டுவருகின்றது.

இந்திய சாதி முறைக்கு ஒத்த, சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது. ஆனால் அவ்வளவு இறுக்கமாக பின்பற்றப்படுவதில்லை. ஒருவரின் தரம், தொழில் செல்வம், இஸ்லாம் மீதான பற்று போன்ற வேறு பல காரணிகளில் தங்கியுள்ளது. சுற்றுலாத்தலங்கள் மக்கள் குடியிருப்புகள் அற்ற தீவுகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையான தொடர்புகள் விரும்பப்படுவதில்லை.

கலாசாரம்

மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தை தவிர்த்த ஏனைய மாலைத்தீவினர் சுன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும். மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது, மாறாக இஸ்லாமிய சட்டம் நேரடியாக அமுலில் உள்ளது. இஸ்லாமின்  வழிபாடுகளுக்கு, பள்ளிவாசல்கள் முக்கிய நிலையங்களாகும். முஸ்லிம்களின் முக்கிய நாளான வெள்ளிக் கிழமைகளில் மதிய நேரத்துக்குப் பின்னர் வியாபார நிலையங்கள் மூடப்படுகின்றன. மாலைத்தீவில் மொத்தம் 724 பள்ளிவாசல்களும் 266 பெண்களுக்கான பள்ளிவாசல்களும் உள்ளன. மாலேயில் உள்ள பெரிய பள்ளிவாசல் பாக்கிஸ்தான், புருனை, மலேசியா, பாரசீக வளைகுடா பகுதி நாடுகள் இணைந்து பணவுதவி செய்து கட்டப்பட்டதாகும் இங்கு இஸ்லாமிய மையம் அமைந்துள்ளது.

ஐந்து வேளை தொழுகையின் போது வேலைத்தளங்களும் கடைகளும் 15 நிமிடத்துக்கு மூடப்படும். மேலும் முஸ்லிம்கள் விரதம் இருக்கும், ரமழான் மாதத்தில் சகல உணவகங்களும் பகல் வேளையில் மூடப்படும். மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் நேரடித் தொடர்பைப் பல நூற்றாண்டுகளாக கொண்டிருக்காதபடியால் இங்கு பழைய சமயங்களின் நம்பிக்கைகள் இஸ்லாம் சமயத்தோடு சேர்த்து பேணப்பட்டுள்ளன. அசுத்த ஆவிகள் பற்றிய நம்பிக்கை இவ்வாறான ஒன்றாகும். இதற்கு இவர்கள் பல மந்திர தந்திரங்களை பின்பற்றுகின்றார்கள். இங்கு ‘பர்தா’ முறை முகத்திரை போடும் வழக்கம் இல்லை. பெண்கள் அரசாங்கத்தில் பெரிய பதவிகள் வகிக்கின்றனர். இது முழுக்க முழுக்க ஒரு முஸ்லீம் நாடு, எனவே மற்ற மதங்களை சார்ந்த பொருட்கள், பத்திரிகைகள், படங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

சவால்களும் எதிர்ப்புகளும்

மாலைத்தீவு அரசியலில் அரசியல் கட்சிகள் இல்லை. கட்சிக்கு எதிராக எந்த சட்டமும் இல்லாவிட்டாலம் மக்கள் கட்சி ரீதியாக அரசியல் நடாத்த விரும்ப வில்லை இதனை ஜனாதிபதி அப்துல் கயூம் பல சந்தர்ப்பங்களில் நிராகரித்துள்ளார். கட்சிகள் இன ,மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தும் என்று தலைவர்கள் நம்பினார்கள். ஆனால் அங்கு நலன்பேணும் குழுக்கள், மஜ்லீகள் அமைப்பு, வியாபாரிகள் சங்கம், என்பன அவ்வபோது  கோரிக்கைகள் எழுப்புகின்றன. ஆனால் அவ்வபோது அரசியல் கொந்தழிப்புகள் உருவாகின்றன. 1985ன் பின்பு கயூமின் காலத்தில் இரண்டு தடவையும் அதற்கு முன்பு ஒரு தடவையும் அரசியல் தலைமைத்துவத்திற்கு எதிராக கிளர்சிகள் தோன்றின. 1988ல் ஏற்பட்ட கொந்தழிப்பை சமாளிக்க இந்திய உதவி நாடப்பட்டது. அதன்பிறகு மாலைத்தீவு அரசாங்கம் இந்திய உதவியோடு காவல் துறையினையும் இராணுவத்தினையும் புணர்நிர்மானம் செய்யத்தொடங்கியது. முதல் முறையாக கயூம் அரசாங்கம் இராணுவத்தை பலப்படுத்த ஆரம்பித்தது.

அப்துல் கையூம். இவரின் இடத்தைப் பலகட்சிகள் கூட்டமைப்பு ஒன்றுசேர்ந்து வீழ்த்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்தான் இந்த முகம்மது நசீத். இவர் ஆக நான்கு ஆண்டுகள் மாத்திரமே ஜனாபதியாக பதவி வகித்த நிலையில் திடீர் போராட்டம் மிகப்பெரிய கலவராமாக மாறும் நிலை தோற்றம் பெற்றவுடன் தானாகவே பதிவியை துறந்து அரசியலில் புதிய யுகம் படைத்திருக்கின்றார் முகம்மது நசீத். இவரின் எதேச்சதிகாரமே இங்கு கிளர்சிசி ஏற்பட பிரதான காரணம். அண்மைக்காலமாக பல நாடுகளில் உள்நாட்டுப் போராட்டம் ஏற்பட்டு புரட்சிகளாக வெடித்து வருகின்றமை யாவரும் அறிந்தவிடயமாகும். இதன் காரணமாக உயர் அரச பதவிகள் பறிபோயுள்ள நிலையில் சிலர் விட்டுக் கொடுப்புடன் பதவியைத் துறக்கவும் தயராகிவிட்டனர். இங்கு நீண்டகாலம் ஜனாதிபதியாக இருந்தவர் மாமூன் அந்தவகையில் அரச கதிரையை விட்டுக் கொடுப்பதில் இறுதியாக இணைந்துகொண்ட நாடு மாலைதீவாகும். மேலும் மாலைத்தீவு எதிர் கொள்ளும் பிரச்சினை 2.3 மீற்றர் உயரம் கொண்ட நிலமே இங்கு காணப்படுவதால்  இன்னும் சில வருடங்களில் கடல் மட்டத்தின் உயர்வு இந்நாட்டை கடலுக்குள் அடிமையாகிவிடும் என்கிற அச்சமாகும்.

மலைத்தீவு தென்னாசிய பிராந்தியத்தில் தன்னை குடியரசாக நிலைநிறுத்தியுள்ள ஒரு நாடாகும். அதேநேரம் தனக்கென அரசியல் பொருளாதார சமுக அம்சங்களுடன் விளங்கும் நாடாகும். அரசியல் நிலை என்கிற போது ஜனாதிபதி, பாராளுமன்றம் என்ற மஜ்லிஸ், நீதித்துறை போன்ற கட்டமைப்புடன் ஜனாதிபதித்துவ ஆட்சியைக்கொண்டு விளங்குகின்றது. அதேபோன்று அந்நாட்டின் பொருளாதார அம்சத்தை எடுத்து கொண்டால் மீன்பிடி, சுற்றுலாத்துறை, குடிசைக்கைத்தொழில், ஏனைய உற்பத்திகள் என்ற வகையில் பொருளாதார முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது. மாலைத்தீவின் சமூகக் கட்டமைப்பை நோக்கும் போது பல்லினத்தவர்களின் கலப்பு இனமாவும் பிறகு முழு நாடும் முஸ்லிம்களாக மாறி முஸ்லிம் சமூக அமைப்பை கொண்டு காணப்படுகின்றது.  இந்திய சாதி முறைக்கு ஒத்த, சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது. ஆனால் அவ்வளவு இறுக்கமாக பின்பற்றப்படுவதில்லை. எனவே இந்நாடு பல உள்நாட்டு கிளர்ச்சிகள் ஏற்பட்டிருந்த போதும் தன்னை குடியரசாக நிலை நிறுத்திருப்பதே அதன் சிறப்பம்சமாகும்.

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *