இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும்  பெண்ணையும்  அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்தான்.

நியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…”

திம்னாத்தில் கண்ட பெண்தோழி அவன் கண்களுக்கு பிரியமானவளாய் இருந்ததால், அவளை தனக்கு கொள்ள வேண்டும் என்று அவன் பெற்றொரை சிம்சோன் வற்புறுத்தினான். அந்தப்பெண், அவன் அடைய ஆசைப்பட்ட ஒரு பொருளாகிவிட்டாள். என்ன விலை கொடுத்தாவது அவளை அடையவேண்டும் என்ற வெறி அவனை உந்தியது. இந்த சம்பந்தத்தில் தேவனாகிய கர்த்தரை அறவே மறந்துவிட்டான்.

அவனுக்கு திம்னாத்தில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை முறைப்படி கொடுக்கும் விருந்தும் ஆரம்பமாகிவிட்டது. திருமணத்தன்று தான் செய்த முடிவுதான் மிகசிறந்த முடிவு என்று நினைத்திருப்பான்.உற்சாகத்தில் காற்றில் மிதந்த அவன் ஒரு விடுகதையை எடுத்து விடுகிறான்.மாப்பிள்ளை கொடுக்கும் ஏழு நாள் விருந்து முடியுமுன் அந்த விடுகதைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிட்டால் முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன் என்றான்.

திருமணமாகி ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து,  உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு என்றனர்.

ஒரு நிமிஷம்! நயம் பண்ணு என்றால் என்ன? ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? ஆதாமிலிருந்து சிம்சோன் வரை வஞ்சனை என்ற கொடிய சொல் மறுபடியும் மறுபடியும் தலை தூக்கி ஆடுகின்றது அல்லவா?

திடீரென்று ஒரே ராத்திரியில் சிம்சோனின் வாழ்க்கை மாறி விட்டது. வெளிப்புறமாய் கண்களுக்கு அழகாய், இச்சிக்கும் வண்ணமாய்த் தோன்றிய அவனுடைய அழகு மனைவி ஒரே நாளில் ஒரு அரிப்பு பெட்டகமாய் மாறிவிட்டாள். தன்னிடம் கைவசமுள்ள அத்தனை வஞ்சனையான வார்த்தைகளையும் அள்ளி அவன்மீது வீசினாள், ஏழு நாட்களும் அழுது புரண்டும் சாதிக்கிறாள்.அவளைப்பற்றி நான் யோசித்தபோது நீதிமொழிகளில் உள்ள ஒரு வசனம் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

அடைமழை நாளில் ஓயாத ஒழுக்கும், சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.    அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். (நீதிமொழிகள்: 27:15,16)

ஏழே நாட்களில் சிம்சோன் திம்னாத்தின் அழகி தனக்கு ஏற்ற மனைவி இல்லை என்பதை உணர்ந்தான். அவளுடைய அடைமழை போன்ற அரிப்பைத் தாங்காமல் தன் விடுகதையின் அர்த்தத்தை அவளிடம் கூறுகிறாம். அவளும் தன்னுடைய இஸ்ரவேல் நாயகனுக்கு மனம்கூசாமல் துரோகம் பண்ணிவிட்டு, தன் பெலிஸ்தருக்கு அதன் அர்த்தத்தை சொல்லிவிடுகிறாள்.

இவையெல்லாம் எங்கே நடக்கிறது?கல்யாண வீட்டில்! எங்கே விருந்தும், உபசரிப்பும், அன்பும், சந்தோஷமும் , களிப்பும் நிறைந்திருக்கவேண்டுமோ அங்கே நயவஞ்சகமும், துரோகமும், கோபமும், கொலையும் நடக்கிறது.

ஜாக்கிரதை! அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்தைவிட்டு விலகி, திருமண பந்தம் என்ற உறவுக்குள் செல்லும் உங்களில் சிலருக்கு இது ஒரு அருமையான பாடம்!

தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் காரியத்தில் சிம்சோனைப் போல நாம் கர்த்தரைத் தேடாமல், நம் சுய இச்சையின்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கும்போது நம் திருமண வாழ்க்கையும் சிக்கலில்தான் முடியும்.

திருமணம் செய்யும் வரை இயேசு கிறிஸ்துவை நாம் நம் ஒப்பந்தத்துக்குள் கொண்டுவருவதேயில்லை. திருமணத்துக்கு பின்பு சிக்கலில் மாட்டும்போது தான் தேவனைத் தேடுகிறோம்.சிக்கலான நம் திருமண வாழ்க்கைக்கு கடவுள் எப்படி பொறுப்பாவார்?

திருமணம் என்பது இரண்டு நபருக்கு நடுவில் ஏற்படும் ஒப்பந்தம் அல்ல,

மூவருக்குள் ஏற்படும் புனித  உடன்படிக்கை!

இயேசு கிறிஸ்துவை முன் வைக்காமல் திருமண பந்தத்துக்குள் நுழைய முயற்சிக்காதே!

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *