கிறிஸ்தவனின் பக்கம்

என்னைப் பற்றி நான்….

 

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நானும் என் சகோதரர்களும் ஒழுக்கத்திலும் பக்தி வழிகளிலும் தேவனை அறிந்துகொள்ளும் அறிவிலும் கிறிஸ்தவ வழிமுறைகளைப் பின்பற்றுவதில் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டோம். இலங்கையில் நாற்சதுர சுவிசேஷ சபை  (foursqure Gospel church in srilanka) போதகராகவும் இறையியல் கல்லூரி ஆசிரியராகவும் கடமையாற்றிய போதகர் இன்பநாதன் இம்மானுவேல் – குளோரி அன்னபுஷ்பம் ஆகியோருக்கு மகனாக ஆகஸ்ட் 2ம் திகதி 1982 இல் பிறந்தேன்.

 

நான் எனது மாணவ பருவத்திலேயே தேவனை அறிந்துகொள்ள அதிகமாக ஆர்வம் காட்டினேன். அந்த சிலாக்கியத்தை நான் என் பெற்றோரின் மூலமாக பெற்றுக்கொண்டேன். நான் தேவனை தேடியமைக்கு முக்கியமான காரணமாக இருந்தது எனது பெற்றோரின் வளர்ப்புமுறைதான். அவ்வாறு நான் பிறந்தபோது, அநேகர் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இறந்ததையும் அந்த நாட்களின்பின் அகதிமுகாமொன்றில் வாழ்ந்த காலத்திலும், இன்னொருதடவை என் தலைக்கு மேலாக ஹெலிகொப்டர் கீழே மக்களை நோக்கி வெடிகளைச் சுட்டபடி பறந்து சென்றபோதும், ஐந்தடி தூரத்தில் செல்குண்டுகள் வெடித்து சிதறியபோதும், என்னுடன் பாடசாலையில் ஒன்றாக கற்ற நண்பர்களில் சிலர் தவறான வழிநடத்தலின் கீழ், துப்பாக்கியை தூக்கவும் பழிவாங்கவும் சண்டையிடவும் தங்களை ஒப்புக்கொடுத்தபோதும் அதிசயமாய் ஆண்டவர் என் சிறுபிராயம்முதல் பாடசாலை நாட்களிலும் என்னைப் பாதுகாத்தார். அவர் ஒருவரே என்னையும் வழிநடத்தினார்.

 

நான் 10 வது வயதில் முழு வேதாகமத்தையும் வாசித்து முடித்தேன். 1996ம் ஆண்டு எனது 14 வது வயதில் தண்ணீர் ஞானஸ்நானத்தை பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருடைய நாமத்தில் பெற்றுக்கொண்டேன். அவ்வருடமே தூயஆவியானவர் தரும் அபிஷேகத்தையும் பெற்றேன். அப்போது நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதன்பிறகு நான் கல்வியைத் தொடர்ந்தேன். தென்னிந்தியாவில் பாளையங்கோட்டை St. Johns கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் தொலைதொடர்பு பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுக்கொண்டேன்.  2012ம் ஆண்டு நியோமியை திருமணம் செய்து கொண்டேன்.

 

அந்தவகையில், வாழ்வில் தேவனுடைய அழைப்பின் சத்தத்தை கண்டுகொண்டவக ராக 2005 ஒக்டோபர் மாதம் முதல் சத்தியவசனம் என்று அன்புடன் அழைக்கப்படும் Back to the bible ஸ்தாபனத்தில் சஞ்சிகை, புத்தக, தியானநுால் எழுத்தாளராக தொகுப்பாளராக பணியாற்றி வருவதோடு 2015 ம் ஆண்டு கொழும்பு இறையியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று ஈழத்து தமிழ்மொழி மூல எழுத்து ஊழியப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றேன்.

 

தேவன் என்னுடன் இடைபட்டு என் பாவங்களை மன்னித்தார் என்ற நிச்சயம் இருந்தபடியினாலும் சிறுவயதிலிருந்து பலவகைகளில் என்னைப் பாதுகாத்து வந்த தேவன் தொடர்ந்து என்னை கைவிடாமல் வழிநடத்தி வருகின்றபடியினாலும் அவருக்கு நன்றியைத் செலுத்துவதோடு என்னை இரட்சித்து, வழிநடத்தி, இம்மட்டும் வாழ வைத்த என் தேவனுடைய சித்தத்தின்படி இனியும் வாழ என்னை அர்ப்பணித்து என் மிகுதி வருடங்களையும் என் ஆண்டவருக்குச் சமர்ப்பிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

 

அன்புடன் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட்

 

Authorதமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்