கிறிஸ்தவனொருவனுக்கு விரோதிகளென்றால், பெரும்பாலும் சிலுவைக்கு விரோதிகளும், நற்செய்திப் பணியை எதிர்க்கிறவர்களுமே (மத் 5:44). ஆனால் சில வேளைகளில் தங்கள் விருப்பு, வெறுப்பு, சுபாவம் இவைகளையடுத்து நீங்கள் செய்பவை அல்லது உங்கள் செய்முறையை விரும்பாது உங்களைப் பகைப்போரும் இருக்கலாம். ஒரு சில சமயங்களில் இவ்வித மக்களோடு சமாதானமாயிருப்பது கூடாத தாகவே போய் விடுகிறது. எனவே தான் வேதம் இப்படிச் சொல்கிறது. ~கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள் (ரோ 12:18).

என்னை எதிர்க்கிற அல்லது வெறுக்கிறவர் களோடுள்ள எனது உறவை மேம்படுத்த கீழ்க்கண்ட வழிமுறைகள் எனக்குப் பயனளித்துள்ளன.

முதலாவது, அவர்கள் மீதுள்ள தேவன்பை எண்ணிப்பார்க்க வேண்டும். ~அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும்; தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும்; அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார் (மத் 5:45). ஒவ் வொருவரும் தேவனுக்கு அருமையானவர்கள். நல்லவன் அல்லது கெட்டவன் என்றழைக்கப்படும் ஒவ்வொருவருக்காகவும் கிறிஸ்து மரித்தார்.

இரண்டாவது, நம்மீது தேவன் எவ்வளவு பொறுமையாயிருக்கிறார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்: எத்தனை முறை நாம் அவரை ஏமாற்றியும் அவர் நம்மை விட்டுவிடவில்லையே. இரக்கத்தில் செல்வந்தராகிய அவர், நாமும் பிறரைக் குறைந்தது ஏழெழுபது தடவையாவது மன்னிக்க எதிர்பார்க்கிறார்.

மூன்றாவது, நமது விரோதிகளுக்காக ஜெபிக்க வேண்டும் (மத் 5:44). ஜெப மண்ணில் அன்பு தழைத்தோங்கும். நம்மை வெறுக்கும் நபருக்காக ஜெபிக்கத் துவங்குகையில் அவரை நேசிப்பது எளிதாகின்றது. என்னால் நேசிக்க முடியவில்லையேயென்று தேவனிடம் அறிக்கையிட்டால், சாதாரணமாக நம்மால் முடியாத நிலையிலும் எதிர்ப்போரை நேசிக்க அவர் தமது ஆவியின் மூலம் தமதன்பை நம்மில் ஊற்றுவார்.

பிசாசைக்கூட சபிக்க தேவன் நம்மை அனுமதிக்கவில்லை (ய+தா 9). எவரையும் சொல்லால் பழித்து விடாதீர்கள். கசப்பான வேருக்கு இதயத்தில் இடம் கொடாதீர்கள். அது உங்களையும் பிறரையும் நாசமாக்கும் (எபி 12:14,15). பழிவாங்குதல் கர்த்தருக் குரியது அந்த ஆயுதத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள். அதனாலேயே நீங்களும் மடிவீர்கள் (மத் 26:52). உங்களை துன்புறுத்துவோருக்கு நன்மையொன்று செய்யத் தருணம் நோக்கியிருங்கள். வெற்றி உங்களுக்கே (ரோ 12:19-21).

~ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் (நீதி 16:7).

By I I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *