வாழ்க்கையில் பலவிதமான காரியங்களை அருமையாக முழுமையாக நாம் அனுபவிக்கின்றோம். பலவிதமான உணவுகளை உட்கொள்ளுகிறோம். பலவித விதமான உடைகளை அணிகிறோம். பலவிதமான நபர்களோடு பழகுகிறோம். ஆயினும் விருப்பமான உணவு எது? பிடித்த நிறம் எது? இப்படி கேள்வி கேட்கப்படும்போது நாம் ஏதேனும் ஒன்றையே பதிலாக சொல்வோம். “இன்ன நிறம் எனக்குப் பிடிக்கும்” அல்லது “இதுதான் எனக்குப் பிடித்த சாப்பாடு”என கூறுவோம். இதற்கு காரணம் என்ன? அதனை நாம் ருசிபார்த்திருப்பதினால் அல்லவா!

இதேபோல் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று நட்பாகும். ஒவ்வொரு நபர்களுக்கும் தமது வாழ்க்கையில் குறிப்பிட்ட ஒருவரை உற்ற நண்பனாக சுட்டிக் காட்டமுடியும். நட்பு இனிமையானது என்பது உலகறிந்த உண்மை. ‘உன் நண்பன் யார் என்று சொல். நீ யார் என்று நான் சொல்லிவிடுவேன்” என்கிறது ஒரு பழமொழி. சிலரை அவர்களுடைய நண்பர்களை வைத்தே அவர் இப்படிப்பட்டவர் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். உன்னுடைய நண்பன் யார்? உண்மையில் நண்பர்கள் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உன் சகநண்பர்கள் தங்களுக்கேற்றபடி உன்னை மாற்றிவிட முற்படுவார்கள். ஆகவே, உன் நண்பன் யார்? யாரை நீ உன் நண்பனாக தொிந்தெடுக்கப்போகின்றாய் என்பதில் நீ மிகவும் கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் நண்பர்களால் உன் வாழ்க்கை சீரழியவும் கூடும். செழிப்படையவும் கூடும். நமது வாழ்வில் நல்ல நண்பர்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவை. அவர்களின் நட்பைக் காட்டிலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்பது தான் மிகமிக முக்கியமான காரியமாகும். நல்ல நண்பன் நம் ஒவ்வொருவருக்கும் தேவை! “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்.” (நீதிமொழிகள் 17:17).

இரண்டு கிறிஸ்தவ நண்பர்கள் ஒன்றாக கல்லூரியில் படித்தார்கள். அவர்களுடைய கடைசி இறுதித்தேர்வு எழுதிய பின் அவர்கள் இருவரும் பிரிந்து செல்லும் தருணம் வந்தது. அந்தக் கடைசி நிமிடத்தில் தன் சக நண்பனுக்கு இப்படியாக ஒருவன் ‘ஆட்டோகிராப்” எழுதிக் கொடுத்தான். ‘என்னுடைய நண்பனே! என்னுடன் சேர்ந்து நீ பல நாட்களாக ஜெபித்திருக்கிறாய்! விளையாடியிருக்கிறாய். சண்டை பிடித்திருக்கிறாய். சமாதானமாகி இருக்கிறாய்! ஆயினும் நாம் பிரிகின்றோம். எனினும், என் நண்பனே, எனது உற்ற நண்பனை நீ கடைசிவிரை மறந்துவிடாதே! அவரை நீ அறிவாய்!” இப்படிக்கு உன்னுடைய உயிர் தோழன் என்று தன்னுடைய சொந்தக் கையொப்பத்தையிட்டு தன்னுடைய சக கிறிஸ்தவ கல்லூரித் தோழனுக்கு எழுதிக்கொடுத்தான். பின்னால் சிறுகுறிப்பு: ‘உன் நண்பனாகிய எனது உற்ற நண்பன் இயேசு கிறிஸ்து என்பதை நீ அறிவாய்” என்று இருந்தது.

ஆம். ஒருவன் இயேசு கிறிஸ்துவை தன் நண்பனாகப் பெற்றிருந்தால், அவரை தன் நண்பனுக்கும் அறிமுகம் செய்பவனாக இருப்பான். நண்பர்கள் ஒருவரை ஒருவர் தாங்கவும் உதவசெய்யவுமே இருக்கின்றார்கள். நண்பர்கள் தங்கள் நட்பை இரகசியமாக மட்டும் தொடரமாட்டார்கள். ஊரே அறிய நட்பாக இருப்பார்கள். தங்கள் நட்பிற்காக உயிரையும் கொடுக்க விரும்புவார்கள். அப்படியாயின், இன்றே உனது நண்பனுக்கு இயேசுவை அறிமுகப்படுத்துவாயா? நீயும் அவரை உனது உற்ற நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரோடு பழகிப்பார். நீயே ஆச்சாியப்படும்படி உன் வாழ்க்கை இனிமைமிக்க ஒன்றாகும். நீ உனது வாழ்க்கையில் என்றென்றும் மாறாத இனிய நட்பினை கண்டிடுவாய்!

இங்கு நில்!

என்றைக்காவது உன்னைப் படைத்த கடவுளிடம் நீர் நண்பனாக பழக முடியும் என்று நினைத்துப் பார்த்திருக்கின்றாயா? கடவுளைப்பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அவரைத் தெய்வமாகவும், இராஜாவாகவும் உலகைப் படைத்தவராகவும் நம்மை சிருஷ்டித்தவராகவும் நீதிபதியாகவும் நாம் எண்ணுகிறோம். இன்னும் சிலர் அவரை காப்பவனாக அழிப்பவனாக உருவாக்குபவனாக எண்ணுகின்றனர். இன்னும் சிலர் அவருக்கு பயந்து அஞ்சி நடுங்குகின்றனர். ஆனால் அவரிடம் நீ ஒரு நண்பனாக பழக முடியும் என்ற எண்ணம் ஏற்படாதல்லவா. ஆனால், நாம் தேவனோடு நண்பர்களாக இருக்க முடியும் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகின்றது. ஆகவே சற்று இங்கு நில்!

ஒவ்வொரு நாளும் சற்று அமர்ந்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை நீ வாசித்துப்பார்! அதை தொடர்ந்தும் வாசித்துக்கொண்டிரு! நீ நிற்க வேண்டிய இடம் அதுவே! வேதாகமத்திற்கு முன் நீ நின்று பழகு. நீ கடவுளுடன் நட்புடன் பழக அது உன்னை பயிற்றுவிக்கும்.

யாக்கோபு 2:23 ல் ஆபிரகாம் தேவனுக்கு சிநேகிதன் எனப்பட்டான்.

யாத்திராகமம் 33:11 ல் சிநேகிதனுடன் பேசுவது போல தேவன் மோசேயுடன் பேசினார்.

மத்தேயு 11:19, லூக்கா 7:34 ல் இயேசு பாவிகளுக்கும் ஆயக்காரருக்கும் சிநேகிதர் எனப்பட்டார்.

யோவான் 11:11 ல் இயேசு லாசருவை சிநேகிதன் என்றார்.

இயேசு தன்னைக் காட்டிக்கொடுக்க வந்த சீடனான யூதாஸ் காரியோத்தையும் பார்த்து இப்படிக் கேட்டார். ‘சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய்” என்று மத்தேயு 26:50 கேட்டார். அதுமட்டுமல்ல, அவர் தம் அனைத்து சீடர்களையும் பார்த்து, ‘நான் உங்களை ஊழியக்காரர் என்று சொல்லுகிறதில்லை. உங்களை சிநேகிதர் என்கிறேன்” (யோவான் 15:15) என்று உரிமையோடு கூறினார். அவ்வாறே, இயேசு தம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை சீஷர்கள் உணர்ந்தே இருந்தனர்.

இந்த சிநேகத்தினைப் பற்றி வாசிக்கும் போதெல்லாம் ஆண்டவரோடு நண்பனாக நீயும் நானும் பழக எவ்வளவு ஒரு பொிய வாய்ப்பு இருக்கிறது என்பதை நீ உணர்கின்றாயா? ஆம், ஆண்டவர் எம்மோடு நண்பனாய் பழக எப்பொழுதும் ஆயத்தம் உள்ளவராகவே இருக்கின்றார். “நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 1:1) இது மாபெரும் உண்மையாகும்.

தேவன் தாம் படைத்த ஏதேன் தோட்டத்தில், தாம் படைத்த ஆதாமோடும் ஏவாளோடும் நட்போடு பழகி வந்தார். ஆயினும் ஆதாமும் ஏவாளும் தமது ‘கீழ்ப்படியாமையினால்” அந்த நட்பினை விரைவில் உடைத்தனர். இன்றும் உலகில் பலர், இறைவனோடுள்ள நட்பை உதாசீனம் செய்தே வாழுகின்றனர். நீயும் நானும் என்னச் செய்யப் போகின்றோம்?  நீயும்கூட ஆண்டவரோடு நண்பனாக பழக வேண்டுமென்றே வேதாகமம் போதிக்கின்றது. அவரை உனது உற்ற நண்பனாக ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உன் கையிலே தான் இருக்கின்றது!

இதைக் கவனி!

உன் நண்பர்களுடன் நீ எவ்வாறெல்லாம் தொடர்புகொள்கிறாய்? அடிக்கடி, கடிதத்தினூடாக, தொலைபேசியினூடாக, முகநூலினூடாக அவர்கள் பேசுவதைக் கேட்கின்றாய் அல்லவா. கடவுளோடு நண்பனாக பழகவேண்டும் என்ற எண்ணம், உன் உள்ளத்தில் இருக்குமாயின், நீ வேதத்தை தினமும் வாசிக்கலாமே. அவருடைய குரலை தினமும் கேட்க ஆரம்பிக்கலாமே. நீ பழக விரும்பும் நண்பனோடு ஒவ்வொருநாளும் எவ்வளவு நேரம் செலவிடுவாயோ, அதுபோல நீ கடவுளோடு நேரத்தை செலவிட ஆரம்பிக்கலாமே. அப்படி நீ ஆண்டவருடன் செலவிடும் நேரமானது அவரோடுள்ள உன் உறவினை வளர்க்கும். அவருக்கு முன்பாக நீ அமைதியாக இரு. அவரிடம் ஜெபி. அவர் சொல்ல விரும்புவதை கேட்க முதலில் வேதத்திற்குச் செவிகொடு. நீ எப்படி உன் நண்பன் முன்பாக மௌனமாய் இருப்பாயோ அப்படியே செய். நாட்கள் செல்லச்செல்ல நீயே அந்த அற்புதமான நட்பில் ஆனந்தம் அடைவாய். நீதிமொழிகள் 6:4 யை வாசித்து பார். அதன்படி நீ அவரிடம் உனக்கு அவசியமானதை கேள். உனக்கு என்ன தேவையோ அதை உன் நண்பன் உனக்கு தரமுடியும் என்று நான் உனக்குச் சொல்லுகிறேன்.

இவ்வுலகில் சகல சூழ்நிலைகளிலும் உண்மையாக நேசிக்கக்கூடிய சகநண்பர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. ஆயினும் யோவான் 15:13 ன் படி உனக்காக ஜீவனைக்கொடுத்த அவருடைய அன்பிலும் மேலான அன்பு இவ்வுலகில் இல்லை. நீதிமொழிகள் 18:24 கூறுகின்றபடி, உன் சகோதரரிலும் அதிக சொந்தமாய்ச் உன்னை நேசிக்கும் சிநேகிதர் கிறிஸ்து ஒருவரே!

இதை செய்!

நமது நட்பிற்கும் அதன் வளர்ச்சிக்கும், நாம் நண்பர்களுடன் செலவிடும் நேரம் மிக முக்கிய பங்காற்றுகின்றது. அதுபோலவே கடவுளோடு உன் நட்பு ஆரம்பமாகவும் அதிலே நீ வளரவும் வேண்டுமானால் நாம் அவரோடு உன் தனிமையில் நேரம் செலவிட பழகவேண்டும். உன் நேரத்தை கடவுளுடன் செலவிடு. அவரது வசனத்துடன் பழகு. அவரது சத்தத்தைக் கேட்க பழகிக்கொண்டே இரு. எப்படி என்று கேட்கின்றாயா? மிகவும் சுலபமான வழியொன்றைக் கூறுகின்றேன். நீ உன்னுடைய வேத புத்தகத்தை எடுத்ததுக்கொண்டு மிகவும் அமைதியான ஓரிடத்திற்குச் செல். மிக முக்கியமாக யாரும் உன்னை தொந்தரவு செய்யாத இடமாக அது இருக்கட்டும். அந்த இடத்தில் இருந்துக்கொண்டு நீ கடவுளிடம் எதைச் சொல்ல விரும்புகின்றாயோ அதைச்சொல்! அதன் பின் உன்னுடைய வேதாகமப் புத்தகத்திலிருந்து ஒரு சில பகுதிகளை எடுத்து வாசி. அந்த வேதப்பகுதியில் அவர் உனக்கு வைத்திருக்கும் திட்டத்தினை உன்னால் புரிந்துகொள்ள முடியும். உனக்குத் தேவையான உதவிகளை, வழிநடத்துதலை, ஞானத்தை அவரிடமே கேள். அத்துடன் நின்றுவிடாமல் அந்த நாள்முழுவதும் கடவுளோடு உன் தொடர்பினை வைத்துக்கொள். அடிக்கடி அவரிடம் பேசு. இடைவிடாமல் அவரின் பிரசன்னத்தை கொண்டிருக்க முற்படு.

ஒருவேளை நீ அலுவலகத்தில் தொழிலில் ஈடுபடக் கூடும். பாடசாலையிலோ, சந்தையிலோ, பிரயாணப்பட்டு போகும்போதோ, வரும்போதோ எப்பொழுதும் ஆண்டவரோடு உன் பழக்கத்தை வைத்துக்கொள். எப்பொழுதெல்லாம் அவரிடம் பேச விரும்புகின்றாரோ, அப்பொழுதெல்லாம் அவருடைய சமுகத்தை நாடி ஓடு. எப்படி இதைச் செய்வது என்று நீ எண்ணக்கூடும். நான் கூறுவதெல்லாம் உன் இருதயத்தில் அவரோடு நாள்முழுவதும் பேசிக் கொண்டே இரு என்பதுதான். நீ வாசித்த வேத பகுதிகளையும் உனக்குப் புரிந்த உண்மைகளையும் உனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அசைப்போட்டுக்கொண்டே இரு. நன்மையானவற்றை சிந்தி. தீமையானவற்றை விட்டுவிட தீர்மானம் செய்துக்கொள். இந்தத் தொடர்பு இன்னும் இன்னும் தொடரத் தொடரதான் ஆண்டவரோடுள்ள உன் நெருக்கம் அதிகாிக்கும். அவரோடுள்ள நட்பும் பழக்கமும் ஐக்கியமும் மென்மேலும் வளரும். அவருடனான நட்பை நீ பெலப்படுத்திக் கொள்ளும்போது, அது உன் வாழ்வில் நீ தாண்ட வேண்டிய மைல்கற்களை தாண்டிட உரிய பெலனைக் கொடுக்கும். அவருடைய ஆலோசனைகளின்படி நீ நடக்கும்போது, நீ ஆண்டவருக்கு இனிய நண்பனாக மாறிக் கொண்டே இருப்பாய். அவரும்கூட உனது இனிய நண்பனாகவே இருப்பார்.

லூக்கா 16:9-17 வரையுள்ள வசனத்தில் இயேசு இப்படிக் கூறுகின்றார், ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது” என்றார்.

இதை மனதில் பதி.

பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகள், தங்கள் பாடங்களில் சில கடினமான வரிகளை மனப்பாடம் செய்வது வழமை. கணக்கில் சில சூத்திரங்களும் விஞ்ஞான குறியீடுகளும் அப்படியே மனனம்செய்துவிடுவது படிப்பிற்கு உதவியாக இருக்கும். அவ்வாறே வேதாகமத்தில் உனக்குப் விருப்பமான பகுதிகளை மனப்பாடம் செய்துகொள். அப்பொழுது உன்னுடைய நட்பு உன் நண்பனுக்கு விசுவாசத்தை உண்டுபண்ணும். நல்ல நண்பர்கள் ஒவ்வொருவரிலொருவர் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பார்கள் அல்லவா? தேவனுடன் நட்பைப் பேண விரும்புகின்றவன், அவருடைய வார்த்தைக்கு அதிக கனத்தைக் கொடுப்பானல்லவா? அவருடைய வார்த்தையைப் பெற்றிருப்பவன் பெரும் செல்வத்தைக் கண்டவனாவான். எனவே நீ மிக முக்கியமான காரியத்தை செய்தாக வேண்டும். உன் நண்பன் உன்னுடன் பேசும் வார்த்தைகளை மறந்துபோகாமல் மனதில் பதித்து வைத்திருக்க வேண்டும்.

இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே இருக்கிறேன் (மத்தேயு 28:20) என்றார் இயேசு. முடிவுபாியந்தம் அவருடைய வார்த்தைகளில் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான் என மாற்கு 13:13 கூறுகின்றது. ஆகவே, இதை வாசிக்கும் இனிய நண்பர்களே, உற்ற நண்பனான கிறிஸ்து இயேசுவை ஒருபோதும் தவிர்த்து வாழவேண்டாம்! அவரே உன்னை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக!

– இ. வஷ்னீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *